Tuesday, January 22, 2008

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது இது தான் நிஜம் 3

கையூட்டு பற்றிய மக்களின் வெளிப்பாடு

கையூட்டுவாங்குதல் என்பதை மக்கள் ஒரு குற்றச்செயலாகவே கருதுவதில்லை மாறாக அது தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு மற்றோர் அங்கீகரிக்கப்பட்ட வழியாகவே நினைக்கிறார்கள் அதாவது அரசு கல்லூரியில் சீட்கிடைக்கவில்லை என்றால் தனியார் கல்லூரியில் சீட் வாங்குவது போலவே நினைக்கிறார்கள். கையூட்டு எதற்க்கு கொடுக்கிறார்கள் அடுத்தவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை தனக்கு கிடைக்கவேண்டும் என்பதாலோ அல்லது அடுத்தவர் வேலையையெல்லாம் விட்டுவிட்டு நம்முடைய வேலையை விரைவில் முடிக்கவேண்டும் என்றோ தனக்கு இல்லாத தகுதியை தகுதியுள்ளவையாக ஈடு செய்யவோதானே. நம் சமுதாயத்தில் கையூட்டு கொடுப்பவன் யாரும் குற்றமானவனாக கருதுவதில்லை கையூட்டு வாங்குபவனைதான் குற்றம் செய்பவனாக கருதுகிறார்கள். அரசு எதாவது ஒரு பணி நியமனம் செய்ய ஆரம்பித்தவுடன் ஏதோ பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் புதிய கிளை துவங்கினால் ஏறும் பங்கு விலை போல் காளைப் பாய்ச்சலில் பணி நியமனத்துக்கான லஞ்சத்தின் மதிப்பு எகிற ஆரம்பித்துவிடுகிறது.

எனக்குத்தெரிந்த ஒரு சில நிகழ்வுகள் ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் பணி நியமனத்துக்கு 30 லட்சம் வரையும் ஒரு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நியமனத்துக்கு 15 லட்சம் வரையும் சென்றிருக்கிறது அதாவது இந்த பணிகளுக்கு கையூட்டு வாங்குவதற்காகவே கையூட்டு கொடுத்து வேலைக்கு போகிறார்கள். இப்படி இவ்வளவு கையூட்டு கொடுத்து பணிக்குசென்ற பிரேக் இன்ஸ்பெக்ட்டர் பிரேக்கே பிடிக்கத்தெறியாதவனுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவார். இப்படி பயிற்சியே பெறாதவனுக்கு உரிமம் கிடைத்தால் ரோட்டில் போகும் எத்தனைபேரை வண்டி ஏற்றி கொள்வானோ! செத்தவனை எத்தனை லட்சம் கையூட்டு கொடுத்தால் பிழைக்க வைக்கமுடியும். கையூட்டு கொடுத்து வேலைக்கு வந்த சட்டம் ஒழுங்கு காவலர் கொடுத்த பணத்தை கையூட்டு வாங்கி சம்பாதிக்காமல் என்னசெய்வார். அப்போது சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவேண்டியவரே கையூட்டு வாங்கினால் சட்டம் எங்கே இருக்கிறது ஒழுங்கு எங்கே இருக்கிறது?

இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் கையூட்டு வாங்கியவன் ஏமாற்றாமல் வேலைவாங்கித்தற சட்டம் ஏதாவது வந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறார்கள். கையூட்டு கொடுப்பதை சட்டப்படி அங்கீகரித்து பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் இப்போது கையூட்டுப் பணத்தை ஜாய்ன்ட் அக்கவுண்ட்டில் போட்டு வேலை வாங்கித்தரும் நேர்மையான வியாபாரம் நடத்தும் வியாபாரிகளும் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் கையூட்டு கொடுத்து வாங்கிய வேலைக்கு கொடுத்தப்பணத்தை இன்னும் எப்போ சம்பாதிப்பது என்று ஒரு வியாபாரத்தில் சம்பாதிப்பது போலவே கையூட்டு வாங்குவதை கருதுகிறார்கள். கையூட்டு கொடுத்து ஒரு வேலை நடைபெறாமல் போனால் அவன் என்னை பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டான் என்று சொல்வார்கள்.

எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒருவன் தற்ப்போது நியமித்த அரசுப் பேருந்து நடத்துனர் பணிக்காக யாரோ ஒருவரிடத்தில் பணம் கொடுத்து இருந்தார் இபோது பணி நியமனமும் முடிந்து விட்டது இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. நியமனத்திற்கு முன்பு யாரிடம் பணம் கொடுத்தார் என்பதை கூட யார்கேட்டாலும் மாற்றி மாற்றி கூறிவந்தார் ஏன்? இந்த வேலை தனக்குமட்டுமே கிடைக்கவேண்டும் என்றுதானே. இப்போது வேலை கிடைக்காதபோது நான் இவனிடம் தான் பணம் கொடுத்தேன் இப்போது ஏமாற்றிவிட்டான் என்றுகூறுகிறார். இவர் என்னவோ யாரையும் ஏமாற்ற நினைக்காதவர் போல பேசுகிறார் வேலை கிடைத்திருந்தால் நான் எவனோ ஒருவனை ஏமாற்றிதான் இந்த வேலையை பெற்றேன் என்று சொல்வாரா. லஞ்சமே ஏமாற்ற கொடுக்கப்படுகிற பணம் அது நமது இல்லை என்று நினைத்துதான் கொடுக்கப்படுகிறது இப்போது ஏமாற்றப்பட்டுவிட்டேன் அந்தப்பணம் திரும்பவும் வேண்டும் என்றால் என்ன நியாயம்.

No comments:

Post a Comment